ஏர் ஆசியா விமான விபத்து : மீட்பு பணியில் சிக்கல்

ஏர் ஆசியா விமான விபத்து : மீட்பு பணியில் சிக்கல்

airasia

ஜனவரி 3, மோசமான வானிலை காரணமாக, விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூரை நோக்கி கடந்த ஞாயிறன்று, ஏர் ஆசியாவுக்கு சொந்தமான கியூ.இசட்.8501 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. 42வது நிமிடத்தில், விமானத்தின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, விபத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், விமானத்தின் சில பாகங்களும், அதில் இருந்தவர் களின் சடலங்களும் பங்களன்பன் கடல்பகுதியில் இருந்து மீட்கப்பட்டன. இருப்பினும், விமானத்தின் கருப்புப் பெட்டி இன்னும் மீட்கப்படாததால், விபத்து எப்படி நேர்ந்தது என்கிற முழு விபரம் தெரியவில்லை.

அதனை மீட்க ஒருவாரம் ஆகலாம் என நேற்று முன்தினம் இந்தோனேசிய அரசு கூறியது. இந்த நிலையில், மோசமான வானிலையால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அதில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்தில், வலுவான காற்று கடல்பரப்பில் வீசி வருகிறது. 4 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி வருகின்றன. இதற்கிடையே, மீட்கப்பட்ட சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேலும், பயணிகளுக்கு சொந்தமான 2 கருப்பு நிற பைகள், பழுப்பு நிற சூட்கேஸ், விமானத்தில் பயன்படுத்தப்படும் ஏணி உள்ளிட்டவை மீட்கப் பட்டுள்ளன.

மீட்புப் பணியில், அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 90 கப்பல்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் இருந்த 162 பேரில், 22 பேரது சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அவர்களில், 8 பேரது சடலங்கள் சுரபாயாவுக்கு அனுப்பப்பட்டன. மரபணு சோதனையின் மூலம் 3 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே, கூடுதலாக 72 வீரர்களுடன் 2 ரஷ்ய விமானங்கள், சோனார், நீர்மூழ்கும் கருவிகள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை மீட்பு பணிக்கு விரைந்துள்ளன.