ஜனவரி 2, கடலில் விழுந்த ஏர் ஏசியா QZ.8501 விமானத்தை அதன் கேப்டன் இரியாண்டோ அவசர காலத்தில் கடலில் செய்யப்படும் லேண்டிங்கை வெற்றிகரமாக செய்திருப்பதாகவும், பெரிய கடல் அலைகளால் விமானம் விபத்துக்குள்ளாயிருக்கலாம் என்றும் வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
”விமானம் வழக்கத்துக்கு மாறாக நிலத்திலோ, கடலிலோ அல்லது மலைப்பகுதிகளிலோ விழுந்து விபத்துக்குள்ளானால் அவசர காலத்தில் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் டிரான்ஸ்மிட்டர் செயல்படத் தொடங்கியிருக்கும்.
ஆனால் அதுபோல் எதுவும் நடக்காததால், விமானம் தரைஇறக்கும் போது எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை” என்று தனது பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளதாக அங்காசா விமான பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் சுடிப்யோ தெரிவித்தார்.
மேலும் கடலின் மேற்பகுதியில் விமானத்தை விமானி சாதுர்யமாக தரையிறக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மோசமான வானிலையின் பிடியில் விமானம் இருக்கும் போது விமானியால் 162 பேரையும் காப்பாற்ற எதுவும் செய்ய முடியாது என்றும் விமான போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இதுவரை கடலில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல குழுக்களின் முயற்சியால் விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கருப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே அதில் உள்ள முக்கியத் தரவுகளை வைத்து விமானம் கடலில் விழுந்ததற்கான காரணம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.