ஜனவரி 2, அண்மைய வெள்ளப்பெருக்கில் தங்களின் பெற்றோர் மூழ்கிப் பலியானதால் திரெங்கானுவில் ஆதரவற்றுப் போன 6 குழந்தைகளுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கணிசமான நேரத்தைச் செலவிட்டார்.
கெமாமான் மாநகராட்சி மன்ற கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில், சற்றே வயது மூத்தவர்களுடன் பிரதமர் உரையாடினார். பின்னர் அம்மாவட்டத்தில் வெள்ள நிலவரம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
ஆறு பேரில் 12 வயதான நோர் சியாஃபிகா சியாரியா தான் மூத்தவர். இவர்களுள், பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தையும் உள்ளது.
இவர்களின் பெற்றோர் சுஹாய்மி மற்றும் ஆசிரியப் பணியாற்றி வந்த நூர்ஹயாடி சுலோங் (37 வயது) இருவரும் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து படகில் மீட்கப்பட்டனர். அப்போது கம்போங் கெலிகோ சே அகோப் அருகே அப்படகு நீர்ச்சுழியில் சிக்கி கவிழ்ந்ததில், இருவரும் வெள்ள நீரில் மூழ்கிப் பலியாகினர்.
நூர்ஹயாடியின் உடல் அடுத்த நாளும், சுஹாய்மியின் உடல் 27ஆம் தேதியும் கண்டெடுக்கப்பட்டன. இவர்களின் இறப்பால் ஆதரவற்றுப் போன 6 குழந்தைகளையும், தாம் பராமரிக்கப் போவதாக நூர்ஹயாடியின் மூத்த சகோதரர் அஸ்மான் தெரிவித்துள்ளார்.