சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதியில் இருந்து 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறப்பு

சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதியில் இருந்து 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறப்பு

MULLAPERIYAR_955631f

ஜனவரி 1, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், முதல் தவணை காலத்தின் கூடுதல் காலம் முடிந்த நிலையில் 8 டிஎம்சியில் 3.01 டிஎம்சி கிருஷ்ணா நீர் மட்டுமே தமிழகத்துக்கு பெறப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தெலுங்கு கங்கை திட்டம் மூலம், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் பெறப்படுகிறது. ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும். இந்நிலையில், அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளதாக கூறி, தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை ஆந்திரா செப்டம்பர் 17ம் தேதி திடீரென நிறுத்தியது. தொடர்ந்து ஆந்திர அரசிடம் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக கடந்த அக்டோபர் 17ம் தேதி மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

முதல் தவணை காலம் கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்திற்கு 2.42 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்தது. எனவே, மீதமுள்ள தண்ணீரை பெறும் நோக்கில் தொடர்ந்து டிசம்பர் வரை கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசு முடிவு செய்தது. ஆனால், தற்போது முதல் தவணை காலத்தின் கூடுதல் காலம் முடிந்த நிலையில் நேற்றுவரை 3.01 டிஎம்சி நீர் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘ஒப்பந்தப்படி முதல் தவணை காலத்தில் கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு தண்ணீர் திறந்து விடும் போது, விவசாயத்திற்காக அங்கு தண்ணீர் எடுத்து கொள்ளப்படுகிறது. இதனால், அங்கு 1700 கன அடி திறந்தாலும், நமக்கு வந்ததோ வெறும் 400 கன அடி நீர் மட்டும் தான். இந்த நிலையில், இரண்டாவது தவணை காலத்தில் தமிழகத்தின் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறக்க வேண்டும். இதனால், மீதமுள்ள டிஎம்சி நீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.