புத்தாண்டில்: தமிழகம் முழுவதும் உஷார் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

புத்தாண்டில்: தமிழகம் முழுவதும் உஷார் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

police1

டிசம்பர் 30, பெங்களூர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, புத்தாண்டு கொண்டாட்டத்தில் நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமராவை தொடர்ந்து கண்காணிக்கவும் ஒரு குழுவினர் தனியாக அமர்த்தப்பட்டுள்ளனர். பெங்களூரில் கடந்த ஞாயிறு இரவு நடந்த குண்டு வெடிப்பில், சென்னையை சேர்ந்த பவானி என்ற பெண் உயிர் இழந் தார். அவரது உறவினர் படுகாயமடைந்தார். குண்டு வெடிப்பு குறித்து பெங்களூரு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபட திட்டம் தீட்டியிருப்பதாகவும், அதனால் பாதுகாப்பை அதி கரிக்கும்படியும் அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உளவு துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக டிஜிபி அசோக் குமார் உத்தரவின்பேரில், இன்று இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கி விடும் என்பதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், தேவாலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள், ரயில், பஸ், விமான நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வும், அந்த இடங் களை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டுள் ளார்.

அதன்படி, போலீஸ் கமிஷனர்களும், மாவட்ட எஸ்பிக்களும் களத்தில் இறங்கி உள்ளனர். முதல் கட்டமாக, தமிழக எல்லைகளில் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்கு பிறகே தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. மேலும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நகரில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, எந்த பகுதியில் எவ்வளவு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்ற பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய விடுமுறை தவிர வேறு எந்த விடுமுறையும் போலீசாருக்கு வழங்க கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையின் நுழைவாயில்களான 16 முக்கிய இடங்களில் போலீசார் முகாமிட்டு, சோதனை நடத்தி வருகின்றனர். நாளை இரவு 10 மணிக்கு மேல் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் கூட்டம் அலை மோதும். இந்த இடங்களில் தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதால், அனைத்து தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சாலையில் தற்காலிக தடுப்புகள் அமைத்து, வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

போலீஸ் எச்சரிக்கை
* குடிபோதையில் வாகனங்களை ஓட்டினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
* பைக்கில் 2 பேருக்கு மேல் அமர்ந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* கடல் நீர் அருகே செல்லக் கூடாது.
* புத்தாண்டு வாழ்த்து கூறுவதன் பேரில் பெண்களை கேலி செய்தல், கையைப் பிடித்து இழுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது.
* பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது.
* பிறர் மீது வர்ணப் பொடிகள்-வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பொது மக்கள் தவிர்த்தல் வேண்டும்.
* இருசக்கர வாகனம் மற்றும் கார்களை அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* பொதுமக்கள் கடலில் விளையாடுதல் மற்றும் படகுகளில் ஏறி கடலுக்குள் செல்ல முற்படுவதை தவிர்த்தல் வேண்டும்.