பாகிஸ்தானில் தனியார் பள்ளிகளுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி

பாகிஸ்தானில் தனியார் பள்ளிகளுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி

Ak47_Render

டிசம்பர் 31, பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த 16-ம்தேதி தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 145 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் இருந்து பள்ளிகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்க்வா மாகாண அரசு அங்குள்ள தனியார் பள்ளிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்தது. ஏற்கனவே இங்குள்ள பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் வேலையில் கைபர் பக்துங்க்வா மாகாணம் இறங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த வேலை முடியும் தருவாயில் உள்ளது. மேலும், பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு குறித்து ஆலோசனையும் நடத்தி வருகிறது.

இதற்கிடையே இந்த மாகாணத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைப்பதற்கு அனுமதி கேட்டு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து பள்ளிக்குழந்தைகள், மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முந்தைய தாக்குதல் போன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்க துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் முன் போலீஸ் மற்றும் உள்துறை அதிகாரிகள் இடம்பெறும் குழு ஒன்று அந்த பள்ளியை சென்று பார்வையிடும். அதன்பிறகு அதற்கான அனுமதியை வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு காவலர்களை பணியில் அமர்த்துதல் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் மாகாண தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.