சுனாமி தாக்கிய 10ம் ஆண்டு நினைவு தினம் கடலோர கிராமங்களில் சோகம்

சுனாமி தாக்கிய 10ம் ஆண்டு நினைவு தினம் கடலோர கிராமங்களில் சோகம்

1217-129-I-G28

டிசம்பர் 27, கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோர மக்களுக்கு மறக்க முடியாத சோக நாள். இந்தோனேஷியா அருகே சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் உருவான ‘சுனாமி‘ எனப்படும் ஆழிப்பேரலை கடலோர பகுதிகளை புரட்டிப் போட்டது. இதில், இந்தியா, இலங்கை, இந்தோனேசியா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.தமிழகத்தில் கடற்கரையோர பகுதிகளான கடலூர், நாகை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதிகளில் இந்த சுனாமியின் கோரத்தாண்டவத்திற்கு ஆயிரக் கணக்கானோர் பலியாகினர். காலம் 10 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும், சுனாமி ஏற்படுத்திய தாக்கத்தின் வடுக்கள் மீனவர்களிடம் மறைந்துவிடவில்லை. சுனாமி பேரழிவின் 10ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடலோர மாவட்டங்களில் அனுசரிக்கப்பட்டது.நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் உள்ள ஸ்தூபியில் கலெக்டர் முனுசாமி தலைமையில் அமைச்சர் ஜெயபால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக ஆர்டிஓ அலுவலகத்திலிருந்து நினைவு ஸ்தூபி வரை மாணவ, மாணவிகள் பேரணியாக வந்தனர்.

வேளாங்கண்ணி பேராலய முகப்பிலிருந்து நேற்று காலை வர்த்தக சங்கத்தினர், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர் சங்கத்தினர், அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முக்கிய வீதிகள் வழியாக இ.சி.ஆர். ரோட்டில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபி வரை மவுன ஊர்வலம் சென்றனர். அங்கு சர்வமத பிரார்த்தனை நடந்தது. இதேபோல் வேளாங்கண்ணி பேராலயத்திலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.நாகை அக்கரைப்பேட்டையில் சுனாமி நினைவாக மீனவ பஞ்சாயத்தார் கட்டியுள்ள தியான மண்டபத்தில் பஞ்சாயத்தார், மீனவர்கள் கலந்து கொண்டு, சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை, கல்லார், வேளாங்கண்ணி ஆகிய பகுதி கடற்கரையில் உறவுகளை இழந்தை மக்கள், கடலை பார்த்து ஒப்பாரி வைத்து அழுதனர். கடலில் பால் தெளித்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.