மோடி அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்

குஜராத்-மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இதன் மீது தொழில்துறையினரும் நடுத்தர வர்க்கத்தினரும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.

வருமானவரி விலக்கு வரம்பிலும் சம்பள அளவை நிர்ணயித்து விதிக்கப்படும் வரி அளவிலும் மேம்போக்கான மாற்றம் செய்வதாக சலுகையின் தன்மை இருக்கக்கூடாது. வரி நிவாரணம் என்பது சேமிப்புகளுக்கு ஊக்கம் தருவதாக இருக்க வேண்டும் என்று மாத சம்பளக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல, பொருளாதாரத்துக்கு உயிரோட்டமாக உள்ள முதலீடுகளை கவரவும், உற்பத்தித்துறைக்கு ஊக்கம் கொடுக்கவும் உரிய நடவடிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வரிச்சலுகையை ஜேட்லி அறிவிப்பார் என்று தொழில் துறையினர் நம்பிக்கை வைத் துள்ளனர். இதற்கு முன்னோட் டம்தான் ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் பண்டங்கள் துறைக்கான உற்பத்தி வரி சலுகையை டிசம்பர் வரை அரசு நீட்டித்தது என்பது அவர்களின் கருத்து.

தங்கம் இறக்குமதி மீதான வரியை அமைச்சர் குறைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கவே அதை கட்டுக்குள் கொண்டுவர கடந்த ஆண்டு தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பருவமழை வழக்கத்தைவிட மிக குறைவாக பெய்துள்ள நிலையில் விவசாய விளைச்சலில் சரிவு ஏற்படுவது சந்தேகத்துக்கு இடமில்லாததாகிவிட்டது. விளைச்சல் பொய்த்து வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு அமைச்சர் நிவாரணம் அறிவிக்கக் கூடும் என்றும் பேச்சு நிலவுகிறது.

பாஜக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி விலை நிலைப்படுத்தல் நிதியத்தை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பும் வெளியாகக்கூடும்.

சரக்கு, சேவை வரிகளை அறிமுகப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நிதி அமைச்சர் அறிவிக்கக்கூடும். ஆனால் நேரடிவரி விதிப்பு சட்டங்கள் தொடர்பான அவரது அணுகுமுறை என்ன என்பது தெரியவில்லை.

ஜேட்லி தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கை. நேரடி வரிவிதிப்பு சட்டம் பற்றி இந்த அறிக்கையில் காணப்படுகிறது.

வளர்ச்சி முடுக்கத்தை மீட்டெடுப்பது அவசியம் என்பதை ஆய்வு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது, மேலும் பொருளாதாரத்தை பாதிக்கும் அமைப்புமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அது யோசனை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு சளைக்காமல் அவற்றுடன் போட்டியிடவும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இன்னொரு கட்ட பொருளாதார சீர்திருத்தம் நாட்டுக்கு அவசியம் எனவும் ஆய்வு அறிக்கை வற்புறுத்தியுள்ளது.

சிக்கல்மிக்க வரி விதிப்பு முறைகளை சீரமைப்பதும், முதலீடுகளை கவர சர்சார்ஜ், செஸ் போன்ற வரிகளுக்கு முழுக்கு போடவேண்டும் என்றும் ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

விலைவாசி உயர்விலிருந்து சாதாரண மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வழி செய்வோம் என்ற வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது பாஜக. ஆனால், ஜேட்லியோ, நிதி மேலாண்மை விஷயத்தில் மிக கறாராகவும் அனுபவ அறிவைக் கொண்டும் செயல்படுவார் என்றே தோன்றுகிறது. சலுகைகள் சார்ந்த கவர்ச்சித் திட்டங்களுக்கு அரசு இடம்தரக் கூடாது என்ற தனது நிலைப்பாட்டை அவர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.