திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

tirunallaru3

டிசம்பர் 17, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், சனிபகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி, இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா, நேற்று பகல் 2.43 மணிக்கு நடைபெற்றது. அதுசமயம், சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார். அப்போது சனிபகவானுக்கு, யக்ஞ ஹோமசாந்தி அபிஷேகம், அர்ச்சனை, தீப ஆராதனைகள் நடைபெற்றது. அதேபோல், கோயிலின் வசந்த மண்டபத்தில், சனிபகவான் சொர்ணகாக வாகனத்தில், நீலநிற மலர் மற்றும் ஆடைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தார். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சனிபகவானை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் நளன் குளம் அருகில் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் நல்லெண்ணை, எள் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, பக்தர்கள் நளன் குளத்தில் விடிய, விடிய புனித நீராடி, குளத்தில் அருகில் உள்ள கலி தீர்த்த விநாயகரை வழிபட் டனர். பின்னர், சனிபகவானை சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறந்ததும், சனிபகவானை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை மேலும் 4 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். விழாவை யொட்டி வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கோயில் முகப்பில் சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அடுத்த சனிபெயர்ச்சி 19-12-2017ல் நடைபெறுகிறது. அப்போது விருச்சிக ராசியிலிருந்து குருபகவானின் வீடாகிய தனுசு ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கவுள்ளார்.

சனிப்பெயர்ச்சி நடைபெறுவதற்கு 45 நாட்களுக்கு முன்னும், பின்னும் சனிபகவானை தரிசனம் செய்யலாம் என்பது கோயில் அர்ச்சகர்களின் கருத்து. அந்த வகையில், சனிப்பெயர்ச்சியின்போது, திருநள்ளாறுக்கு வர இயலாதவர்கள், இன்னும் 45 நாட்கள் வரை (அனைத்து நாட்களிலும்) திருநள்ளாறுக்கு வந்து சனிபகவானை தரிசனம் செய்யலாம். அப்போதும் சனிப்பெயர்ச்சியன்று கிடைக்கும் பலன்கள் கிடைக்கும். அதனால், கோயில் நிர்வாகம் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு வரும் பக்தர்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வைத்துள்ளது.