நடிகை அஞ்சலியின் குடும்பமும், இயக்குனர் களஞ்சியமும் நட்புடன் இருந்தார்கள். அஞ்சலிக்கு பல சினிமா வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் களஞ்சியம். அதற்கு நன்றி கடனாக அஞ்சலி அவ்வப்போது களஞ்சியம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியா நடித்துக் கொடுப்பார். கடைசியாக கருங்காலி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
உறவு நன்றாக இருந்தபோது களஞ்சியம் ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை தொடங்கினார். இதில் களஞ்சியத்திற்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வந்தார். இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் சித்தி பாரதிதேவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றார். அதன் பிறகு பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தது.
களஞ்சியம் ஆரம்பித்த ஊர்சுற்றி புராணம் படம் பாதியில் நிற்கிறது. பிடிக்காவிட்டாலும் நயன்தராவும், ஹன்சிகாவும் சிம்பு படத்தில் நடிப்பதைப்போல ஊர்சுற்றி புராணத்தில் அஞ்சலி நடித்து தரவேண்டும். அந்தப் படத்தால் கோடி கணக்கில் நஷ்டம் அடைந்திருக்கிறேன் என்று களஞ்சியம் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கள், நடிகர் சங்கம், பெப்சி ஆகியவற்றில் புகார் மனு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அஞ்சலி மீண்டும் தமிழில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவருக்கு பின்புலமாக மதுரையை சேர்ந்த ஒரு விவிஐபி இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கிடையில் “களஞ்சியம் படத்தில் அஞ்சலி நடித்துக் கொடுக்காவிட்டால் அவர் தமிழ் படத்தில் நடிக்க தடைவிதிப்பது ஆலோசிப்போம்” என்று இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: “அஞ்சலி தமிழில் நடிக்க இதுவரை தடைவிதிக்வில்லை. ஆனாலும் இயக்குனர் களஞ்சியம் கொடுத்திருக்கும் புகார் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அஞ்சலியின் மானேஜரை தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறோம்.
சங்கத்திற்கு வருமாறு அவரை அழைத்திருக்கிறோம். அஞ்சலிக்கு மெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளோம். இருவரிடமிருந்தும் பதில் வரவில்லை. ஒருவேளை ஊர்சுற்றி புராணம் படத்தில் அஞ்சலி நடிக்க மறுத்தால் தடை விதிப்பது பற்றி ஆலோசிப்போம்” என்றார்.