டிசம்பர் 17, குவைத் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று இத்தாலியில் இருந்து சவுதி அரேபியா நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்தக் கப்பல், எகிப்தில் மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் இணைக்கிற சூயஸ் கால்வாயை கடந்து, செங்கடலில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக, எதிரே வந்த எகிப்து நாட்டின் மீன்பிடி படகு மீது கப்பல் பயங்கரமாக மோதியது. கப்பல் மோதிய வேகத்தில், அந்த படகு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படகில் இருந்த 13 எகிப்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
விபத்துக்கு காரணமான கப்பலை எகிப்து ராணுவத்தினர் சபாகா துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் சூயஸ் கால்வாயின் வடக்கு முனையில் 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதும், இதனால் அங்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.