நாசாவின் ஆளில்லா விண்கலம் ஓரியான் விண்ணில் பாய்ந்தது

நாசாவின் ஆளில்லா விண்கலம் ஓரியான் விண்ணில் பாய்ந்தது

satellite2

டிசம்பர் 6, நாசா உருவாக்கிய புதிய வகை ஆளில்லா விண்கலம் ஓரியான், சோதனை முயற்சியாக நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களையும், பொருட்களையும் கொண்டு செல்ல அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா, 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த விமான மாடல் விண்கலங்கள் டிஸ்கவரி, எண்டவர், அட்லாண்டிஸ் ஆகியவை அனைத்தும் கடந்த 2011ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டன. அதிக பொருட் செலவு காரணமாக இந்த வகை விண்கலங்களை இயக்குவதை அமெரிக்கா நிறுத்தியது. இதனால் மீண்டும் பழைய முறைக்கு திரும்பி, குறைந்த செலவில் கேப்சூல் வகை விண்கலங்களை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கும் முயற்சியில் நாசா இறங்கியது.

கடந்த 3 ஆண்டு கால முயற்சியில் அமெரிக்காவின் நாசா மையம் உருவாக்கிய நவீன கேப்சூல் விண்கலம் ஓரியான். சோதனை முயற்சியாக ஆளில்லாமல் ஓரியான் விண்கலம், டெல்டா4 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனவரால் ஏவுதளத்திலிருந்து நேற்று மாலை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது விண்ணில் 3,600 மைல்கள் பயணம் செய்யும். புவிவட்ட பாதையில் 2 முறை ஓரியான் விண்கலம் சுற்றியபின், 4 மணி 30 நிமிடங்கள் கழித்து இந்த விண்கலம் பசுபிக் கடலில் விழும். பஜா கலிபோர்னியா கடற்கரையிலிருந்து 600 மைல் தொலைவில் விழும் இந்த விண்கல கேப்சூலை மீட்கும் பணியில், அமெரிக்க கடற்படை கப்பல் யு.எஸ்.எஸ் ஆங்கரேஜ், மற்றும் அமெரிக்க ராணுவ மீட்பு கப்பல் யு.எஸ்.என்.எஸ் சல்வார் ஆகியவை ஈடுபடும். பல கட்ட சோதனைகளுக்குப் பின் ஓரியான் விண்கலத்தில் 2021ம் ஆண்டு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதில் 4 முதல் 6 விண்வெளி வீரர்கள் பயணிக்க முடியும்.