திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Arunachala_Deepam-60

டிசம்பர் 6, நினைத்தாலே முக்தி தரும்’ ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழா துர்க்கையம்மன் உற்சவத்தில் தொடங்கி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் முடிவடையும். இதன்படி மொத்தம் 17 நாட்கள் திருவிழா நடக்கும். கொடியேற்றத்திற்கு பிறகு 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கும். இவ்வாறு பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.

தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. இதற்காக நேற்று அதிகாலை 1 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் சாமி சன்னதி முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் பரணி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.

இதை காண்பதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 2 மணிமுதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை முடிந்ததும் பரணி தீபம் ஏற்றுவதற்கான பூஜை நடந்தது. 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு, 5 பெரிய அகல் விளக்குகளில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.

பல லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இதனால் கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் அன்னதானம், இலவச நீர், மோர் வழங்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளினர்.

அதே நேரத்தில் கோவில் கொடிமரம் முன்பும், மலை உச்சியிலும் தீபம் ஏற்றுவதற்கு தயாராக இருந்தனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் மாலை 5.59 மணிக்கு ஆடியபடியே வந்தார். அவர் காட்சியளித்ததும் சரியாக 6 மணிக்கு கோவிலில் அகண்ட தீபமும், மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது.

அப்போது கோவில் வளாகத்திலும், கிரிவலப்பாதையிலும் மற்றும் நகர் முழுவதும் இருந்த 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையை நோக்கி ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர். மலைஉச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை நேரில் சென்று தரிசிப்பதற்காக காலை முதலே பக்தர்கள் மலைக்கு ஏறிச் சென்றவண்ணம் இருந்தனர்.