ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈரான் விமானங்கள் குண்டுமழை

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈரான் விமானங்கள் குண்டுமழை

iraq

டிசம்பர் 4, ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படையினரின் வான்வழி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக ஈரானிய போர்விமானங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்குமிடங்கள் மீது தன்னிச்சையாக குண்டுகள் வீசி வருகின்றன என்று அமெரிக்க ராணுவம் நேற்று வாஷிங்டனில் செய்தி வெளியிட்டது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெறும் அமெரிக்க வான்வழி தாக்குதல் குறித்து நேற்றிரவு வாஷிங்டனில் அமெரிக்க ராணுவ பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஈராக்கின் கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் தியாலா, கோபேன் மற்றும் ஈராக்கின் எல்லையில் உள்ள பல்வேறு நகரங்களில் ஈரானின் எப்-4 நவீன போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி வருகின்றனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நாள்தோறும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலில் ஈரானும் கலந்து கொள்ள வேண்டும். ஈரானின் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா தலையிடாது. ஈரான் தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

ஷியா பிரிவு ஈராக் அரசுடன் அதே பிரிவை சேர்ந்த ஈரான் அரசும் நெருங்கி நட்பு வைத்துள்ளது. அத்துடன், ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஈராக் அரசும் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது ஈரான் ராணுவத்தினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஜான் கிர்பி கூறினார்.