நவம்பர் 27, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இக்கூட்டத்தை வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டர் அ.ஞானசேகரன், அறநிலையத்துறை ஆணையர் தனபால், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, கோவில் இணை ஆணையர் செந்தில்வேலன், நகராட்சி தலைவர் என்.பாலச்சந்தர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது போக்குவரத்துத்துறை சார்பில் இந்த ஆண்டு 2,182 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக தெரிவித்தனர். கூட்டத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படும் வருகிற 5–ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு ரெயிலும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு சிறப்பு ரெயிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் பாதுகாப்பு பணிக்கு 10 ஆயிரம் போலீசார் வருவதாக காவல் துறை சார்பில் தெரிவித்தனர். தேரோட்டத்தின்போது பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் காலில் ஷூ அணிந்துகொண்டு தேரின் அருகில் வருவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. அதை தவிர்க்க போலீசார் ‘ஷூ’ அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மின்சாரம் தடையில்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது குறிப்பிடத்தக்கது.