5 மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க தயார்: ராஜபக்சே

5 மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க தயார்: ராஜபக்சே

mahinda-rajapaksa1

நவம்பர் 12, தமிழக மீனவர்கள் 5 பேரை விரைவில் விடுவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளதற்கு மினவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். போதை பொருட்கள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தங்கச்சி மடத்தை சேர்ந்த 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதனை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்றுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

மினவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து இந்தியா சார்பில் கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய திருப்பமாக மீனவர்கள் 5 பேருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே பொதுமன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்நாட்டு தொலைதொடர்பு அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். பொது மன்னிப்பு வழங்கபட்டால் 2 அல்லது 3 நாட்களில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சரின் இந்த தகவலால் மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா சார்பில் மீனவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் இருந்தால் மட்டுமே மன்னிப்பு சாத்தியம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெளிவுபடுத்தியதாக பிரபா கணேசன் கூறியுள்ளார். மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவது குறித்து இன்று முடிவெடுக்க இருப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.