நவம்பர் 11, சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை அபுதாபி வழியாக உகாண்டா நாட்டுக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது உகாண்டா நாட்டை சேர்ந்த நகாயா கமியத்(வயது 23) என்ற பெண் விமானத்தில் ஏற வந்தார். அவரிடம் பாஸ்போர்ட் இல்லை. அவசர கால சான்று மற்றும் ஆவணங்கள் வைத்து இருந்தார். அவற்றை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது உகாண்டா நாட்டு பெண் நகாயா கமியத் வைத்திருந்த ஆவணங்கள் போலியானவை என்பது தெரியவந்தது. மேலும் அவர் மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூர் வந்து உள்ளார். அவர் எதற்காக சென்னையில் இருந்து அவசரமாக செல்ல முயன்றார்? என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அவர் போதை பொருள் கடத்தலில் தொடர்பு உடையவரா? அவர் மீது ஏதாவது வழக்குகள் இருக்கிறதா? எனவும் அதிகாரிகள் விசாரித்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் உகாண்டா நாட்டு பெண் நகாயா கமியத்தை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்.