நவம்பர் 11, வரும் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாகும் வாய்ப்பை மறுக்க முடியாது என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறினார். மத்திய அரசின், சிவில் விமானப் போக்குவரத்து வரைவுக் கொள்கையை அசோக் கஜபதி ராஜு நேற்று வெளியிட்டார்.
மத்திய அரசுக்கு சொந்தமான, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ), தேசிய ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹன்ஸ் ஆகியவற்றை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, பிராந்திய அளவில் விமான சேவைகளை அதிகரிப்பது, 6 மெட்ரோ விமான நிலையங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது, தனியார் பங்களிப்பில் பி.பி.பி. (கட்டிப் பராமரித்து பின்னர் ஒப்படைத்தல்) அடிப்படையில் புதிய விமான நிலையங்கள் உருவாக்குவது, விமான எரிபொருள் செலவை கட்டுப்படுத்துவது, சரக்கு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகள் வரைவுக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டம் இப்போது இல்லை. என்றாலும் எதிர்காலத்தில் இதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. இது தொடர்பான பரிந்துரைகள் பல்வேறு தரப்பில் இருந்து வந்துள்ளன.
செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் வகையில் ஏ.ஏ.ஐ., பவன் ஹன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் சேர்க்கப்படும். ஏர் இந்தியா நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களை வகுக்க நிபுணர் குழு அமைக்கப்படும். இந்நிறுவனம் முழு ஆற்றலை பெறுவது மிகவும் அவசியம்.
சிவில் விமானப் போக்குவரத்து துறையின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களும் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் முழு செயல்திறன் பெறுவதற்கு திட்டம் வகுக்கப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவுக் கொள்கை பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டு, வரும் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன்.