அக்டோபர் 28, ஈராக்கில் இரட்டை கார் குண்டு வெடிப்புகளில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். ஜர்ப் அல் சகர் என்ற நகரத்தில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியின் மீது வெடிகுண்டுகளுடன் வந்த காரை தற்கொலைப்படை தீவிரவாதி மோதச் செய்ததில் 24 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாக்தாத் நகரின் புறநகர் பகுதியில் வணிக வளாகங்கள் நிறைந்த பரபரப்பான பகுதியில் மேலும் ஒரு கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 14 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயமடைந்தனர்.
முஹம்மது நபியின் பேரரான இமாம் ஹுசைன் அவர்கள் போரில் கொல்லப்பட்ட இடமான கர்பலா நகருக்கு முஹர்றம் மாதத்தில் ஏராளமான ஷியாப் பிரிவு முஸ்லிம்கள் இந்த மாதத்தில் யாத்திரை செல்வார்கள். வரும் 4-ம் தேதி முஹர்றம் தினம் வருவதால், அந்த யாத்திரிகர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஐயம் எழுந்துள்ளது.