சூரிய சக்தியில் இயங்கும் விமானம் மார்ச்சில் அறிமுகம்: அபுதாபியிலிருந்து புறப்படுகிறது

சூரிய சக்தியில் இயங்கும் விமானம் மார்ச்சில் அறிமுகம்: அபுதாபியிலிருந்து புறப்படுகிறது

vim

அக்டோபர் 27, ஒரு சொட்டு எரிபொருள் இல்லாமல் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் சோலார் இம்பல்ஸ் 2 (எஸ்ஐ2) என்ற சோலார் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வரும் 2015 மார்ச் மாதம் அபுதாபியிலிருந்து புறப்பட்டு உலகை சுற்றிவர திட்டமிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் வடிவமைத்துள்ள ஒருவர் மட்டும் அமரக் கூடிய இந்த விமானத்தில் முதன் முறையாக உலகத்தை சுற்றிவரும் முயற்சியாக பயணத்தை தொடங்க உள்ளனர். இந்த விமானத்துக்கு எரிபொருள் தேவையில்லை. காற்றை மாசுபடுத்தும் புகையை வெளியிடாது. இரவிலும், பகலிலும் பறக்கும் திறனுடையது. கார்பன் இழையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சோலார் விமானத்தின் இறகுகளின் நீளம் 72 மீட்டராகும். இது போயிங் 7478ஐ ரக விமானத்தைக் காட்டிலும் பெரியது. மேலும், 2,300 கிலோ எடை உடையதாகும். இந்த விமானத்தில் 17,000 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதிலுள்ள 633 கிலோ எத்தியம் ரீசார்ஜ் பேட்டரிகள் இரவில் விமானம் பறக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானம் அபுதாபியிலிருந்து புறப்பட்டு இந்தியா, சீனா, பசிபிக் கடல், அமெரிக்கா மற்றும் வட ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு மேலே பறந்து அபுதாபியிலேயே தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இவ்விமானம் அபுதாபிக்கு எடுத்து வரப்பட உள்ளது. இத்திட்டம் குறித்து கலந்தாய்வு செய்ய சோலார் இம்ப்லஸ் அதிகாரிகள் அபுதாபி வந்துள்ளனர். அபுதாபியிலிருந்து புறப்படும் இவ்விமான பயணத் திட்டத்தின் பங்குதாரர்களில் ஒருவரான புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிறுவனத்தின் தலைவர் சுல்தான் அஹமது அல் ஜாபர் கூறுகையில், “அபுதாபியிலிருந்து இந்த விமானம் புறப்படும் தினம் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமையும் என்றார்.