அக்டோபர் 27, சிலி நாட்டில் இன்டர்நெட் மூலம் பிறந்து இரு நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 6,250-க்கு விலைக்கு வாங்கிய நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இவ்வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில், 2013 ஆம் ஆண்டு வெரோனிகா என்னும் 18 வயது பெண், பிறந்து இரு நாட்களே ஆன தனது பெண் குழந்தையை இன்டர்நெட் மூலம் ஜுவான் கார்லோஸ் என்பவருக்கு 102 டாலர்களுக்கு (சுமார் ரூ.6,250) விற்றதாகவும், அன்று முதல் அப்பெண் குழந்தை ஜுவான் மற்றும் அவரது துணைவியாரோடு இருந்து வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
குழந்தையை விற்ற வெரோனிகாவின் கணவர் தனது குழந்தை கடத்தப்பட்டதாக அளித்த புகாரை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமாக குழந்தையை விலைக்கு வாங்கியதாக அரசு தரப்பு ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டு தண்டனை உறுதி என தெரிகிறது.