நைஜீரியாவில் எபோலோ வைரைஸ் நோய் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த சிலமாதங்களாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 4447 பேர் அந்நாடுகளில் மரணமடைந்துள்ளனர். அதிலும் லைபீரியா நாட்டில் எபோலோவின் தாக்கம் அதிகமாக உள்ளது. எபோலோ வைரைஸ் காரணமாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நைஜீரியாவில் எபோலோ நோய் பாதித்த நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் பதிவு செய்து 42 நாட்கள் ஆகின்றன என்றும், அதன் பிறகு நோய்த் தொற்று பாதித்த நபர்கள் என்று யாரும் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தகவல் கூறியுள்ளது. மேலும் நோயின் தாக்குதல் இல்லாமல் இருப்பது, நைஜீரியாவில் எபோலோ நோய் இல்லாமல் இருப்பதையே காட்டுகிறது என்றும், நைஜீரியா அரசைப்போல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால் எபோலோ நோய் அனைத்து நாடுகளிலும் இல்லாமல் ஆகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.