மும்பை தமிழ் வாலிபர் மலேசிய பெண் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம், கோட்டபாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தற்போது மும்பை, அண்டாப்ல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் விஜய். இவர் மும்பையில் உள்ள ஒரு பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள கிளைக்கு விஜய் மாற்றப்பட்டார். அப்போது அவருக்கு அதே நிறுவன அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஜெய்பிரிட்கார் என்ற மலேசிய பெண் அறிமுகமானார். அந்த பெண்ணின் தாய் மொழி மலாய். அவருக்கு தமிழ் தெரியாது.
ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. காதல் மொழியால் பேச தொடங்கினர். ஆனால் தங்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் தங்கள் பெற்றோரிடம் அனுமதி கேட்டனர்.
இந்துமுறைப்படி திருமணம்
காதலின் மகத்துவத்தை புரிந்த 2 பேரின் பெற்றோர்களும் விஜய், ஜெய்பிரிட்கார் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினர். இதையடுத்து அவர்களின் திருமணம் தமிழ் கலாசாரப்படியும், இந்து முறைப்படியும் அண்டாப்ல் மலைமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மலேசியாவில் இருந்து வந்த ஜெய்பிரிட்காரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
தமிழ் வாலிபரை கரம்பிடித்த மலேசிய பெண் ஜெய்பிரிட்கார் கூறும்போது, “எனக்கு காதல் திருமணத்தில் எப்போதும் விருப்பம் இருந்தது இல்லை. பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தேன். ஆனால் மலேசியாவிலும், டி.வி.களிலும் தமிழர்கள் திருமண விழாக்களை காணும் போது அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. மேலும் தமிழர்களின் கலாசாரம் மற்றும் அவர்களின் சில பழக்கவழக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. எனவே தான் ஒரு தமிழரை என் வாழ்க்கை துணையாக்கினேன்.” என்றார்.