ஆப்கானிஸ்தானில் 3 வயது சிறுவனுக்கு துப்பாக்கியால் சுட தலிபான் தீவிரவாதிகள் பயிற்சி

ஆப்கானிஸ்தானில் 3 வயது சிறுவனுக்கு துப்பாக்கியால் சுட தலிபான் தீவிரவாதிகள் பயிற்சி

taliban

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் முகாமிட்டு போரிட்டு வருகின்றன. அங்கு அவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தங்கியுள்ளனர்.

இருந்தும் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை முற்றிலுமாக அழிக்க முடிய வில்லை. இன்னும் அவர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அதாவது சில வாரங்களில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் வாபஸ் ஆகின்றன. அதனால் தலிபான்கள் தங்கள் நிலைகளை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.

அங்கு வாழும் சிறுவர்களுக்கும் தீவிரவாத பயிற்சி அளித்து வருகின்றனர். தலிபான்களின் மிக பலம் வாய்ந்த பகுதியான டாங்கி பள்ளத்தாக்கு பகுதியில் 3 வயது சிறுவனுக்கு தலிபான்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும் காட்சி சமீபத்தில் பி.பி.சி.யில் ஒளிபரப்பானது.

அவன் தனது கையில் லாவகமாக துப்பாக்கியை பிடித்து இருக்கிறான். அதன் மூலம் மக்களை சுட்டுக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கிறான்.

அவனது அருகே முகத்தை மறைத்தபடி நிற்கும் தீவிரவாதிகள் சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் அரசால் தேடப்படும் தலிபான் முன்னாள் கவர்னர் மவுலவி பத்ரி பேட்டியும் பி.பி.சி.யில் ஒளிபரப்பானது.

அதில், ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் இஸ்லாமிய அரசு அமைவதை விரும்புகின்றனர். அதை மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை. எனவே எங்கள் மண்ணில் உலவும் எதிரிகளை கொல்கிறோம் என்றார்.

நேட்டோ படைகள் வாபஸ் ஆன பிறகு பலவீனமாக உள்ள ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் மீது தாக்குதல் நடத்த தலிபான் தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர்.