எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம்: மோடி தொடங்கி வைத்தார்

எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம்: மோடி தொடங்கி வைத்தார்

modi

எம்.பி.க்களின் கிராம வளர்ச்சி திட்டமான ‘‘சன்சாத் ஆதர்ஷ், சிராம் யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:–

நாடு சுதந்திரம் பெற்ற பின் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரசும் கிராமபுறமேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்தியது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதே நேரத்தில் காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

கிராமபுற மேம்பாட்டில் நாம் காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வருவோம். இதில் புதிய விஷயங்களும் இடம் பெறும். இந்த திட்டம் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கானது. ஒருவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட வேண்டும்.

ஒவ்வொரு எம்.பி.யும் 3 கிராமங்களை தத்து எடுக்க வேண்டும். மொத்தம் 800 எம்.பி.க்கள் உள்ளனர். இதன் மூலம் 2019–ம் ஆண்டுக்குள் 2,500 கிராமங்கள் மேம்பாடு அடைந்துவிடும்.

இதன் மூலம் அனைத்து கிராமங்களும் எரிவாயு, உரம் உள்பட அனைத்து வசதிகளையும் பெறும். கிராம மக்களின் நலனே நமது கனவாகும். எந்த ஆட்சி வந்தாலும் இந்த திட்டத்தை கிடப்பில் போட முடியாது.

நான் வாரணாசி பகுதியில் உள்ள கிராமத்தை தேர்வு செய்ய உள்ளேன். இதற்கான வழிகாட்டுதல் கிடைக்கப் பெற்றேன். ஆலோசனை செய்து இது பற்றி முடிவு செய்வேன். ஒவ்வொரு மனிதன் அல்லது கிராமம் அனைத்து வசதிகளையும் பெற்று பெருமை அடைவதையே விரும்புகிறோம்.

இந்த திட்டத்தை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களும் கிராமங்களை மேம்படுத்த முயற்சிக்கலாம்.