என் தமிழ்

தாப்பா தொங் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 90ஆம் ஆண்டு விழா : டத்தோஸ்ரீ எம். சரவணன் பங்கேற்பு

1936ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தாப்பா தொங் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி, இவ்வாண்டு தனது 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி, இன்னும் பத்தாண்டுகளில் நூற்றாண்டு விழாவை நோக்கிப் பயணிக்கிறது. இப்பள்ளியின் மாணவர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற டத்தோஸ்ரீ எம். சரவணன், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும், தங்களை உருவாக்கிய தமிழ்ப்பள்ளிகளுக்கு அவர்கள் உதவ முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், அன்றாட வாழ்க்கை முதல் கல்வி வரை செயற்கை நுண்ணறிவு (AI) பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பாடப்புத்தகக் கல்வியுடன் நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வித் திறன்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்வது காலத்தின் தேவையாகும் என சரவணன் குறிப்பிட்டார். குறிப்பாக, கணினியைப் பயன்படுத்தும் திறனைத் தாண்டி, செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளையும் அதன் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளையும் மாணவர்கள் அறிந்துகொள்வது அவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் பயனளிக்கும் என்றார்.

மாணவர்களின் தனித்துவமான திறன்களை அடையாளம் கண்டு, பள்ளிப் பருவத்திலேயே அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் வழங்குவது சிறந்த எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்கு முக்கியமானது என்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

Scroll to Top