காசா, 27 நவம்பர் 2026 : காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கல்வித்துறை துணை அமைச்சர் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காசா கல்வித்துறை துணை அமைச்சர் காலித் அபு நாடா மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். காசா நகரின் மேலும் இரு பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மருத்துவமனைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
காலித் அபு நாடா ஹமாஸ் அமைப்பின் பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பொறுப்புகளை வகித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், அவரது மரணம் குறித்து ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
2025 அக்டோபரில் அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.







