என் தமிழ்

பள்ளிக் கல்வியில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை விரிவுபடுத்தும் தேசிய முயற்சி : ‘AI Temu AI’ திட்டத்தை அறிமுகப்படுத்திய அன்வார்

புத்ராஜெயா, 26 நவம்பர் 2026 : பள்ளிக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை விரிவுபடுத்தும் தேசிய முயற்சியான ‘AI Temu AI’ திட்டத்தின் தொடக்க விழாவில் மாணவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தின் வெற்றி பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்றும், கல்வியில் AI பயன்பாட்டை மேம்படுத்த அனைத்துத் தரப்பினரின் ஆதரவும், குறிப்பாக தொழில்துறையின் பங்களிப்பும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன் அடிப்படையில், YTL குழுமத்தின் YTL AI Labs அறிமுகப்படுத்தியுள்ள Cikgu ILMU திட்டத்தை வரவேற்பதாக அன்வார் தெரிவித்தார். AI Malaysia நிறுவனத்தின் ILMU தொழில்நுட்பத்தில் இயங்கும் இத்திட்டம், மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுவது அரசாங்கம், தொழில்துறை மற்றும் கல்வித்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், DELIMa 3.0 மற்றும் கல்வி அமைச்சின் AI எழுத்தறிவு வழிகாட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டிஜிட்டல் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், AI தொழில்நுட்பத்தை நெறிமுறைகளுடனும் பொறுப்புடனும் பயன்படுத்தும் கலாசாரத்தை வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டும் அதேவேளையில், வாசிப்புப் பழக்கம், மொழியின் முக்கியத்துவம் மற்றும் மனிதநேயப் பண்புகளைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், கல்வியின் நோக்கம் இயந்திரங்களை உருவாக்குவது அல்ல, மனிதர்களை உருவாக்குவதே என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

புதிய அறிவுத் துறைகளில் தங்களை மேம்படுத்திக்கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். அறிவில் சிறந்து, நற்பண்புகளுடன், உயர்ந்த ஆளுமை கொண்ட தலைமுறையை உருவாக்குவதே ‘வானத்தை எட்டும் இலட்சியம், மண்ணில் வேரூன்றிய நிலை’ என்ற அணுகுமுறையின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top