கோலாலம்பூர், 25 நவம்பர் 2026 : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, AI Companion எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தோழமைச் செயலிகளின் மீது குழந்தைகள் உணர்வுப்பூர்வமாக அதிகம் சார்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பாக நவம்பர் 24ஆம் தேதி மக்களவையில் உரையாற்றிய அவர், குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இரண்டு சட்டங்களைப் பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார்.
அவை 2025ஆம் ஆண்டின் இணையப் பாதுகாப்புச் சட்டம் (சட்டம் 866) மற்றும் 2017ஆம் ஆண்டின் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (சட்டம் 792) ஆகியவையாகும். இச்சட்டங்கள் மூலம் சிறார்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள AI ஆளுகைச் சட்டமூலம், தொழில்நுட்பத்தின் செயல்பாடு மற்றும் அதன் மீதான கட்டுப்பாட்டு அளவைப் பொறுத்து AI உருவாக்குநர்கள் மற்றும் செயல்படுத்துபவர்களுக்கான பொறுப்புகளை வரையறுக்கும். AI தொடர்பான பாதிப்புகள் மற்றும் புதிய ஆபத்துகளைக் கண்டறிவதற்கான சம்பவப் புகார் நடைமுறையும் இதில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி வழங்கும் HEAL 15555 மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கான Talian Kasih 15999 ஆகிய உதவி எண்களும் தொடர்ந்து செயல்படும் என அவர் தெரிவித்தார். இதற்கிடையில், AI பாதுகாப்பு தொடர்பான ஆய்வு, சோதனை மற்றும் இடர் மதிப்பீட்டுத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் மலேசிய AI பாதுகாப்பு நிறுவனம் (MY-AiSafe) உருவாக்கப்பட்டு வருவதாகவும் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
குழந்தைகளின் உயிர், பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், AI தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களும் செயல்படுத்துபவர்களும் தங்களது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதில் டிஜிட்டல் அமைச்சகம் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.







