என் தமிழ்

எளிய குடும்பப் பின்னணியிலிருந்து முனைவர் பட்டம் வரை : டாக்டர் பூங்கோதை சந்திரசேகரத்தின் கல்விச் சாதனை

தஞ்சோங் மாலிம், 25 நவம்பர் 2026 : எளிய குடும்பத்தில் பிறந்து, பல்வேறு சவால்களைக் கடந்து தனது குடும்பத்தில் முதல் முனைவர் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டாக்டர் பூங்கோதை சந்திரசேகரம்.

மாற்றுத்திறனாளியான தந்தையின் மகளான இவர், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (UPSI) கலை, கணினியியல் மற்றும் படைப்பாக்கத் தொழில்துறை புலத்தின் கீழ் கற்பித்தல் ஊடகத் துறையில் முனைவர் பட்டத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளார். மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஆய்வை முடித்து Graduate on Time (GOT) சிறப்பையும் பெற்றுள்ளார்.

இவரது ஆய்வு, விரிவாக்கப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பமான Augmented Reality (AR) மூலம் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் அறநெறிச் சிந்தனையை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டது. இதற்காக INAR-MOREMO என்ற புதிய கற்பித்தல் மாதிரியையும் அவர் உருவாக்கியுள்ளார்.

கல்வித் தொழில்நுட்பம், கற்பித்தல் ஊடகம், நவீன கற்பித்தல் முறைகள், கல்வி ஆராய்ச்சி, AR தொழில்நுட்பம் மற்றும் அறநெறிக் கல்வி ஆகியவை அவரது நிபுணத்துவத் துறைகளாகும்.

மலேசியக் கல்வி அமைச்சின் கீழ் 14 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ள பூங்கோதை, 2019ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான விருதையும் (APC), 2022ஆம் ஆண்டு மலேசிய அரசின் உயர்கல்வி உதவித்தொகையையும் (HLP) பெற்றுள்ளார்.

குடும்பப் பொறுப்புகள் மற்றும் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்து, விடாமுயற்சியுடன் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய இவர், தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றி, கல்வி ஆராய்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் வழியாக நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பங்களிக்க விரும்புகிறார்.

எளிய குடும்பப் பின்னணி உயர்கல்விச் சாதனைக்குத் தடையல்ல என்பதைத் தனது முயற்சியால் நிரூபித்துள்ள டாக்டர் பூங்கோதையின் வெற்றி, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் ஊக்கமளிக்கும் சாதனையாக அமைந்துள்ளது.

Scroll to Top