கோலாலம்பூர், 25 நவம்பர் 2026 : இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3R) தொடர்பான விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும், சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்பான புகார்கள் விசாரிக்கப்படுவதில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். புகார் அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் காவல்துறை விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறை என்றார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்பான பல புகார்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எனினும், அனைத்து விசாரணைகளும் வழக்குத் தொடரும் நிலைக்குச் செல்வதில்லை என்றும் விளக்கினார்.
விசாரணைகள் இன, மத வேறுபாடுகளைக் கடந்து வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அன்வார், விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பலாம் என்றும் தெரிவித்தார். மேலும், எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், நாட்டின் இன, மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
3R விவகாரங்கள் அரசியலாக்கப்படாமல் இருப்பதுடன், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழான மன்னராட்சிக் கோட்பாடுகளும் இன, மத நல்லிணக்கமும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, ஆட்சியாளர்கள் மாநாட்டிலும் இத்தகைய விவகாரங்கள் சிறப்பு விவாதப் பொருளாக இடம்பெறுவதாக அவர் கூறினார்.







