கோலாலம்பூர், 23 நவம்பர் 2026 : டாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதி (P106) ஏற்பாட்டில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்கள் ஒன்றுகூடி பண்டிகையைக் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டார். பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் நட்பு, நல்லிணக்கம், ஒற்றுமையுடன் ஒன்றிணைந்தது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் தனித்துவம் அதன் பன்முகத்தன்மையில் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து, பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடுவது நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகக் கூறினார். இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இத்தகைய நிகழ்வுகள், மலேசியர்களிடையே நட்புறவையும் சமூக நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.







