மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தினர். இது குறித்து கருணாநிதி கூறுகையில்: தற்போது அறிவிக்க உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வு காரணமாக, ஏழை மக்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4 என்பது ரூ.4.60 எனவும், 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் ரூ.5.75 என்பதிலிருந்து ரூ.6.60 என்ற அளவுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மானியமாக தற்போது 500 யூனிட் வரை மட்டுமே வழங்கி வருகிறது. 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு தமிழக அரசு மானியம் அளிப்பதில்லை.
இந்த நிலையில் சாதாரண நடுத்தர மக்கள் தற்போது வளர்ந்து வரும் வாழ்க்கை சூழலில் இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுக்கு குறையாமல் பயன்படுத்துவர். இப்போது உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வால் 600 யூனிட்டுக்கு யூனிட் ஒன்றுக்கு 85 பைசா வீதம், இதுவரை ரூ.3,450 மட்டுமே கட்டணமாகச் செலுத்தி வந்தவர்கள், இனிமேல் கூடுதலாக ரூ.510 சேர்த்து ரூ. 3,960 கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலை வரும். அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இவ்வாறு மின்சாரம், பேருந்து, பால் கட்டணங்களை உயர்த்துவது வாடிக்கை என்பதை மக்கள் அறிவர் என்றார் அவர்.