கோலாலம்பூர், 22 நவம்பர் 2026 : மலேசியத் தமிழர்களின் ஒற்றுமை, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், தமிழ் கலை கலாச்சார சங்கம் (TACA) ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டம் நவம்பர் 20ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள டான் ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
TACA தலைவர் டாக்டர் ஆர்.வி. ஷ்யாம் பிரசாத் வரவேற்புரையாற்றினார். மலேசியத் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, அவர்களின் மொழி, கலை மற்றும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே சங்கத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார். தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் துணை இயக்குநர் புகழேந்தி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.



இந்தியத் தூதரகப் பிரதிநிதி பிரதீஷ் குமார், OMS குழும நிறுவனர் OMS தியாகராஜன், நெகிரி செம்பிலான் மாநிலத் துணை சபாநாயகர் டத்தோ ரவி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் நடனம், இசை, குழுப் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும், தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆறு பேருக்கு முதன்முறையாக TACA Icon Awards 2026 விருதுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, மலேசிய NRT அமைப்பின் தலைவர் சார்பில் 100 பேருக்கு இலவசக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் விழாவில் பங்கேற்க TACA-விற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளதாக டாக்டர் ஷ்யாம் பிரசாத் தெரிவித்தார்.



தமிழக அரசின் ஆதரவுக்கும் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டதற்கும் நன்றி தெரிவித்த அவர், அயலகத் தமிழர்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காகத் தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், மலேசியத் தமிழர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, ஒன்றிணைந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். TACA துணைத் தலைவர் ஹரிஹரசுதன், ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரூபன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் விழாவை ஒருங்கிணைத்தனர்.







