பினாங்கு, 21 நவம்பர் 2026 : 2027ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பினாங்கில் பந்தல் நிர்வாகிகளுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஏறத்தாழ 100 பந்தல் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பினாங்கு இந்து அறப்பணி வாரியமும், அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி மலைக்கோயிலும் இணைந்து ஏற்பாடு செய்த இக்கூட்டம், பினாங்கு கொம்ப்ளெக்ஸ் மாஸ்யாரகாட் பென்யாயாங் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ராயர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செனட்டர் லிங்கேஷ் ஆர்.ஏ., கோயில் தலைவர் குமாரா, பினாங்கு காவல்துறை பிரதிநிதி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநிலத் தலைவர் தர்மன் ஆனந்தனும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 2027 தைப்பூசத் திருவிழாவின்போது எழக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
தைப்பூசத் திருவிழா சிறப்பாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் பந்தல் நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.







