ஷா ஆலாம், 17 நவம்பர் 2026 : சிலாங்கூர் மாநிலத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியச் சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில், ‘சிலாங்கூர் கலை, கலாசார மற்றும் பாரம்பரிய விழா 2026’ வரும் நவம்பர் 19 முதல் 22ஆம் தேதி வரை ஷா ஆலாம் சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. சிலாங்கூரின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சமூகங்களின் பாரம்பரியங்கள், கலை வடிவங்கள் மற்றும் கலாசாரச் சிறப்புகளை ஒரே இடத்தில் கொண்டுவரும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பாரம்பரியக் கிராமம், உணவுத் திருவிழா, பாரம்பரிய ஆடை கண்காட்சி, சிலாங்கூரின் பாரம்பரிய ஆடை அலங்கார அணிவகுப்பு, பட்டிக் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, திறந்தவெளித் திரைப்படக் காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
மேலும், சீன மற்றும் இந்திய பாரம்பரிய உணவு வகைகள் தயாரிக்கும் நேரடி செயல்விளக்கங்கள், பாரம்பரிய வாவ் கப்பல் பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, பல்வேறு இனங்களின் கலாசாரக் கலை நிகழ்ச்சிகள், இரவு நேர சிறப்பு நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சிலாங்கூர் பாரம்பரிய ஓட்டப் போட்டி ஆகியவையும் நடைபெறவுள்ளன.
இதனுடன், ‘மலாம்ஹன்யா யாங் சத்து’ எனும் இசை நிகழ்ச்சியும் விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இடம்பெறவுள்ளது. சிலாங்கூரின் கலை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை நேரடியாகக் கண்டு ரசிக்கும் இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருகை தந்து விழாவில் பங்கேற்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.







