என் தமிழ்

மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநில மன்றம், ஜார்ஜ்டவுன் வட்டார மன்றம் இணைந்து தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு : பல்லின ஒற்றுமைக்கு முக்கியத்துவம்

பினாங்கு, 17 நவம்பர் 2026 : பல்லின மக்களிடையே ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில், பினாங்கில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.

மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநில மன்றமும் ஜார்ஜ்டவுன் வட்டார மன்றமும் இணைந்து, மாநிலத் தலைவர் தர்மன் ஆனந்தன் தலைமையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டன. பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் மற்றும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் ஹுய் யிங் இந்தத் திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

தீபாவளி பண்டிகை கடந்த வாரமே கொண்டாடப்பட்டிருந்தாலும், சமூக மக்களுடன் பண்டிகை மகிழ்ச்சியைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளும் வகையில் லிம் ஹுய் யிங் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். பாரம்பரிய சேலையில் அவர் கலந்துகொண்டது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

பினாங்கு முதலமைச்சர் சோ கோன் இயோ, பினாங்கு மாநகராட்சி மேயர் டத்தோ இரா. ராஜேந்திரன் பி. அந்தோணி, பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர், அதன் துணைத் தலைவர் லிங்கேஷ் ஆர்.ஏ., சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இத்தகைய கொண்டாட்டங்கள் மலேசியாவின் பன்முகச் சமூகத்தின் சிறப்பைப் பிரதிபலிப்பதுடன், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் வழிவகுக்கின்றன.

Scroll to Top