கோலாலம்பூர், 14 நவம்பர் 2026 : அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் (Fed), டிசம்பர் மாதம் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, அடுத்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு குறையக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்க டாலரின் வலுவான நிலை தொடர்ந்து நீடிக்கும் என்பதால், அடுத்த வாரம் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு RM4.07 முதல் RM4.10 வரை வர்த்தகமாகும் என பேங்க் முஆமலாட் மலேசியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அஃப்ஸானிசாம் அப்துல் ரஷீத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களின் கவனத்தை அமெரிக்க டாலர் பக்கம் திருப்பியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், அமெரிக்காவின் அக்டோபர் மாத சில்லறை விற்பனை குறித்த தரவுகள் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளன. செப்டம்பர் மாதத்தில் 0.8 விழுக்காடாக இருந்த சில்லறை விற்பனை வளர்ச்சி, அக்டோபரில் 0.2 விழுக்காடாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தரவுகளையும் சந்தை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள் என்றார்.
வாராந்திர ஒப்பீட்டின்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு முந்தைய வாரத்தின் 4.0565/0610 என்ற நிலையிலிருந்து 4.0845/0890 ஆகக் குறைந்துள்ளது.
அதேவேளையில், ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்ட், யூரோ ஆகிய முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் வலுப்பெற்றுள்ளது. ஆசியான் நாணயங்களில் தாய்லாந்து பாட், பிலிப்பைன்ஸ் பெசோ, இந்தோனேசிய ரூபியா ஆகியவற்றுக்கு எதிராகவும் ரிங்கிட் உயர்ந்துள்ளது. எனினும், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக அதன் மதிப்பு சரிந்துள்ளது.







