என் தமிழ்

ஜப்பானிய விளையாட்டுகள் மூலம் மலேசியா – ஜப்பான் நட்புறவை வலுப்படுத்தும் முயற்சி : தைப்பிங்கில் சிறப்புக் கண்காட்சி

தைப்பிங், 14 நவம்பர் 2026 : ஜப்பானிய விளையாட்டுகள் மற்றும் கலாசாரத்தை மலேசிய மக்களிடம் அறிமுகப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு சிறப்புக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய அருங்காட்சியகத் துறை, பேராக் அருங்காட்சியகத்தில் ‘ஓமோச்சா: தற்கால ஜப்பானிய விளையாட்டுப் பொருள்கள்’ என்ற கண்காட்சியை நடத்தியுள்ளது.

இக்கண்காட்சியைத் தொடக்கி வைத்த தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஹஸ்லினா அப்துல் ஹமிட், ஜப்பானிய விளையாட்டுக் கலாசாரத்தின் மூலம் மலேசியா – ஜப்பான் இடையிலான கலாசாரத் தூதரக உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜப்பானின் நவீன விளையாட்டுக் கலாசாரத்தைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், பாரம்பரிய மற்றும் இயந்திரவியல் விளையாட்டுகளிலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுகள் வரை அவை அடைந்துள்ள பரிணாம வளர்ச்சியை எடுத்துரைப்பதும் இக்கண்காட்சியின் நோக்கமாகும்.

விளையாட்டுகள் மொழி, புவியியல் மற்றும் கலாசார எல்லைகளைக் கடந்து மக்களை இணைக்கும் சக்தி கொண்டவை எனக் குறிப்பிட்ட டத்தோ ஹஸ்லினா, ஒத்துழைப்பு, ஒழுக்கம், நட்பு போன்ற பண்புகள் இரு நாடுகளின் மக்களிடையேயும் பொதுவானதாக விளங்குவதாகக் கூறினார். கலாசாரத்தின் தனித்துவங்களை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பே உண்மையான தூதரக உறவுகளின் பலம் என்றும், இதன் மூலம் மக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மதிக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 1982ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கிழக்கை நோக்கிய கொள்கையின் தொடர்ச்சியாக, இக்கண்காட்சி மலேசியா – ஜப்பான் இடையிலான கலாசாரப் பரிமாற்றத்தையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Scroll to Top