என் தமிழ்

மதத்தின் அடிப்படையில் ஒருவரின் நியாயத்தைத் தீர்மானிக்க முடியாது : ஹாடி அவாங் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் – யுனேஸ்வரன் வலியுறுத்தல்

கோலாலம்பூர், 14 நவம்பர் 2026 : மலேசியாவில் வாழும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஸ் கட்சித் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஹாடி அவாங், முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி செய்வதைவிட, எவ்வளவு மோசமான முஸ்லிம்கள் ஆட்சி செய்தாலும் அவர்கள் குறைவாகவே கொடுமையானவர்கள் எனக் கூறியதாக யுனேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

ஒருவரின் மதத்தை வைத்து அவரது நேர்மை, நியாயம் அல்லது செயல்பாடுகளை மதிப்பிட முடியாது எனக் குறிப்பிட்ட அவர், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர் தவறு செய்தவரே என்றும், நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்படுபவரை மதத்தின் அடிப்படையில் குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தமது கண்டனம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானதல்ல எனத் தெளிவுபடுத்திய யுனேஸ்வரன், இஸ்லாம் நாட்டின் கூட்டரசு மதமாக இருப்பதையும், அதேவேளையில் பிற மதங்களைப் பின்பற்றுவோரின் உரிமைகளையும் கூட்டரசு அரசியலமைப்பு பாதுகாப்பதையும் நினைவுபடுத்தினார். நீதி, நேர்மை, பொறுப்புணர்வு ஆகியவை அனைத்து மதங்களும் வலியுறுத்தும் பண்புகள் என்றும் அவர் கூறினார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் என்பது அரசியல் கொள்கைகள், மக்கள் சேவை, நேர்மை மற்றும் ஆட்சி நிர்வாகத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, மதங்களுக்கு இடையே அச்சத்தையும் பிளவையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்றார்.

மலேசியாவின் முஸ்லிம் அல்லாத குடிமக்களும் நாட்டின் வளர்ச்சி, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்தக் குடிமகனும் தாழ்வாகக் கருதப்படக் கூடாது என வலியுறுத்தினார்.

கூட்டரசு அரசியலமைப்பின் 8(1)ஆவது பிரிவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும், அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். தேசியக் கொள்கைகளில் இடம்பெறும் சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பின் மேன்மை மற்றும் நன்னடத்தை ஆகிய கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன என்றார்.

அனைத்து மதங்களையும் இனங்களையும் சேர்ந்த மக்களுக்கு ஆட்சியாளர்கள் நீதி வழங்க வேண்டும் என ஹாடி அவாங் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டிய யுனேஸ்வரன், முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி செய்வதைப் பொதுவாகக் கொடுமையானதாகச் சித்தரிக்கும் அவரது கருத்து இதற்கு முரணாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

எனவே, தமது கருத்தின் உண்மையான நோக்கத்தை ஹாடி அவாங் வெளிப்படையாக விளக்குவதுடன், முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களைக் கொடுமையானவர்களாகச் சித்தரிக்கும் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மத வேறுபாடுகளை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தாமல், அனைத்து மக்களின் ஒற்றுமை, அமைதி மற்றும் நம்பிக்கையைப் பாதுகாப்பதே தலைவர்களின் பொறுப்பு என்றும் யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.

“மதம் ஒருவருக்குக் கொடுமை செய்ய உரிமம் வழங்குவதில்லை. மத வேறுபாடு ஒருவரைக் கொடுமையானவராக மாற்றுவதில்லை. நீதி என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். மலேசியா அனைவருக்கும் சொந்தமான நாடு; தேசிய ஒற்றுமையை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது,” என அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

Scroll to Top