என் தமிழ்

குளிம் உயர் தொழில்நுட்பப் பூங்கா: 15 ஆண்டு இணையக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் செல்காம் டிஜி, KTPC கையெழுத்து

குளிம், 02 நவம்பர் 2026 : கெடா மாநிலத்தில் அமைந்துள்ள குளிம் உயர் தொழில்நுட்பப் பூங்காவின் (Kulim Hi-Tech Park) அடுத்தகட்ட தொழில்துறை வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், செல்காம் டிஜி பெர்ஹாட் (CelcomDigi Berhad) நிறுவனமும் குளிம் தொழில்நுட்பப் பூங்காக் கழகமும் (Kulim Technology Park Corporation – KTPC) 15 ஆண்டுகால முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன் மூலம், குளிம் உயர் தொழில்நுட்பப் பூங்காவின் தொழில்துறை மண்டலம் 4A பகுதியில் கண்ணாடி இழை இணையக் கட்டமைப்பு (Fibre Connectivity) வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. புதிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும், அவற்றின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும்.

1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குளிம் உயர் தொழில்நுட்பப் பூங்கா, கேடா மாநிலத்தின் முக்கியத் தொழில்துறை மையமாக வளர்ந்துள்ளது. உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துள்ள இப்பூங்காவில், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி மொத்தம் RM189.4 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், 48,813 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, தொழில்துறை மண்டலம் 4A பகுதியில் கண்ணாடி இழைக் குழாய் கட்டமைப்பைச் செல்காம் டிஜி நிர்வகிக்கும். அங்கு புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு, தனிப்பட்ட இணையச் சேவை, தனியார் குத்தகை இணைப்புகள், ஐபி விபிஎன் (IPVPN), டிடபிள்யூடிஎம் (DWDM) மற்றும் நிர்வகிக்கப்படும் கண்ணாடி இழை இணையச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைத் தொடர்பு வசதிகளும் வழங்கப்படும்.

வடக்கு பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு

இந்தக் கூட்டாண்மை, பெர்லிஸ், கேடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு பிராந்தியப் பொருளாதார மண்டலத்தின் (NCER) வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து குளிம் தொழில்நுட்பப் பூங்காக் கழகத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ முகமது சாஹில் ஜாபிடி கூறுகையில், தொழில்துறைப் பூங்காவின் வளர்ச்சி என்பது உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், நிறுவனங்கள் வளரவும், முதலீடுகள் பெருகவும், உள்ளூர் மக்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகவும் ஏற்ற சூழலை ஏற்படுத்துவதாகும் என்றார்.

செல்காம் டிஜியுடனான இந்தக் கூட்டாண்மை, புதிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான கண்ணாடி இழை இணையக் கட்டமைப்பை வழங்குவதுடன், கேடா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, உள்ளூர் திறமையாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் வடக்கு பிராந்தியத்தின் தொழில்துறை முன்னேற்றத்திற்கும் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

செல்காம் டிஜியின் நிறுவன வணிகப் பிரிவுத் தலைமை அதிகாரி டி. குகன் கூறுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நிறுவனங்களின் போட்டித்திறனை அதிகரிப்பதற்கும் டிஜிட்டல் இணைப்பு மிகவும் அவசியமானது என்றார்.

மேலும், வெறும் இணையச் சேவைகளை வழங்குவதுடன் தங்களது பணி முடிந்துவிடுவதில்லை என்றும், நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகள் தொடர்ந்து வளர்வதற்குத் தேவையான டிஜிட்டல் அடித்தளங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

குளிம் உயர் தொழில்நுட்பப் பூங்காவின் நான்காம் கட்ட வளர்ச்சிக்கு இந்தக் கூட்டாண்மை ஆதரவளிப்பதுடன், கேடா மாநிலம் மற்றும் வடக்கு பிராந்தியத்தின் தொழில்துறை முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top