என் தமிழ்

அசஹான் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் தேனேஷுக்கு ஆதரவு திரட்டிய யுனேஸ்வரன் ராமராஜ்

மலாக்கா, 07 நவம்பர் 2026 : மலாக்கா மாநிலத்தின் அசஹான் சட்டமன்றத் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் தேனேஷுடன் இணைந்து மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார் யுனேஸ்வரன் ராமராஜ். பத்தாங் மெலாக்காவில் அமைந்துள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்ற அவர், அங்குள்ள இந்து சமூகத்தினரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அசஹான் தொகுதியின் முக்கிய தேர்தல் நடவடிக்கை மையத்திற்குச் சென்று, தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள கட்சித் தொண்டர்களையும் சந்தித்தார். சிலாங்கூர் மாநில ஜேபிஆர்என் அமைப்பைச் சேர்ந்த டோக் அலி மற்றும் சீர்திருத்த இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களின் களப்பணிக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர், வேட்பாளர் தேனேஷ் மற்றும் பிரபாகரன் எம்.பி. ஆகியோருடன் இணைந்து நடைபெற்ற சிறுகூட்டத்தில் தமிழ்ச் சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.

அப்போது கல்வி மற்றும் தொழில்நுட்ப, தொழிற்கல்விப் பயிற்சியின் (TVET) முக்கியத்துவத்தை வலியுறுத்திய யுனேஸ்வரன், இளைஞர்கள் இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். முறையான கல்வியும் தொழில்திறனும் வேலைவாய்ப்புகளைப் பெறவும், வருமானத்தை உயர்த்தவும், குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் எனக் குறிப்பிட்டார்.

அசஹான் தொகுதியின் ஹராப்பான் வேட்பாளர் தேனேஷ், 37, சமூகப் பணிகளில் அனுபவம் கொண்டவர் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், அலோர் காஜா கெஅடிலான் கிளையின் செயற்குழு உறுப்பினராகவும், மலாக்கா மாநில இளைஞர் பிரிவின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் தேனேஷ், தற்போது வணிக நிர்வாக முதுகலைப் பட்டப்படிப்பையும் (MBA) தொடர்ந்து வருகிறார்.

சமூகத்துடன் நெருக்கமாக இருந்து பணியாற்றுவதுடன், தொடர்ந்து கல்வி கற்று தன்னை மேம்படுத்திக் கொள்ளும் இளைஞர்களே நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவை என்றும் யுனேஸ்வரன் கூறினார். இறுதியாக, அசஹான் தொகுதி வாழ் தமிழ் மற்றும் இந்து மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், தீப ஒளித் திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் நலத்தை ஏற்படுத்தட்டும் என வாழ்த்தினார்.

Scroll to Top