என் தமிழ்

எண்ணெய்ப்பனை சிறு விவசாயிகளுக்கு உதவ பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் திட்டம் – அன்வார்

கோலாலம்பூர், 07 நவம்பர் 2026 : எண்ணெய்ப்பனை சிறு விவசாயிகளின் உற்பத்தித் திறனையும் வருமானத்தையும் உயர்த்தும் நோக்கில், பெருந்தோட்ட நிறுவனங்களுடன் அவர்களை இணைந்து செயல்படச் செய்வது குறித்து அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சிறு விவசாயிகளின் உற்பத்தித் திறன் மற்றும் விளைபொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உதவக்கூடிய வகையில், இதற்கான முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெருந்தோட்டத் துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வந்தாலும், வெற்றிகரமாகச் செயல்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் குறைந்த வருமானம் ஈட்டும் சிறு விவசாயிகளுக்கும் இடையிலான இடைவெளி களையப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற 14ஆவது மலேசியா மடானி அறிஞர் மன்றக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது அன்வார் இதனைத் தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பில் உலகளாவிய நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்வதில் நாட்டின் மீள்திறன் என்ற கருப்பொருளில் இம்மன்றம் நடைபெற்றது.

மேலும், சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேராக் மாநிலம் தைப்பிங்கில் பெருந்தோட்டத் துறை பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே, நிறுவனங்களும் சிறு விவசாயிகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனத் தாம் பரிந்துரைத்ததாக அவர் குறிப்பிட்டார். சிறு விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் மூலதனப் பற்றாக்குறை, குறைந்த உற்பத்தித் திறன், பலவீனமான சந்தைப்படுத்தல் முறை ஆகிய பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இதற்கிடையில், SD Guthrie நிறுவனத்தின் குழுத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி முகமது ஹாரிஸ் முகமது அர்ஷாத் பேசுகையில், சுயாதீன எண்ணெய்ப்பனை சிறு விவசாயிகளின் ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி சுமார் இரண்டு டன்னாக இருப்பதாகவும், தங்கள் நிறுவனத்தில் அது நான்கு டன்னாகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதிர்ந்த மரங்கள், உரமிடுதல் மற்றும் மறுநடவு நடவடிக்கைகளுக்குப் போதிய ஆதரவு இல்லாமை ஆகியவை இந்த உற்பத்தி இடைவெளிக்கான முக்கியக் காரணங்களாக உள்ளன என்றும் அவர் விளக்கினார்.

இந்தோனேசியாவில் பின்பற்றப்படும் ஒரு கூட்டுறவு முறையை முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, பெருந்தோட்ட நிறுவனம் மறுநடவுக்கான செலவை ஏற்றுக்கொள்ளும்; அதற்குப் பதிலாக சிறு விவசாயிகள் தங்களது எண்ணெய்ப்பனை விளைபொருட்களை அந்த நிறுவனத்திற்கே விற்பனை செய்வார்கள்.

Scroll to Top