கோலாலம்பூர், 06 நவம்பர் 2026 : மலேசிய இந்தியர்கள் தங்களது மொழி, சமயம், கலை, பண்பாடு மற்றும் பாரம்பரிய விழுமியங்களைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருவது பெருமைக்குரியது என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ஒளி, நம்பிக்கை, அன்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் இத்திருநாள் மலேசிய இந்தியக் குடும்பங்கள் அனைத்திலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் ஏற்படுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவின் தனித்துவம் அதன் பல்லினப் பண்பாட்டில் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு சமூகமும் தங்களது அடையாளங்களைப் பாதுகாத்தவாறே ஒரே தேசத்தின் மக்களாக ஒற்றுமையுடன் வாழ்வது நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாகக் கூறினார். ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், பாரம்பரியக் கலைகள், பண்டிகைகள் மற்றும் குடும்ப மரபுகள் மூலம் இந்திய சமூகத்தின் பண்பாட்டுச் செல்வம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பண்பாட்டு அடையாளங்கள் எதிர்காலத் தலைமுறையினரிடமும் நிலைத்திருக்க வேண்டும் என்றும், இந்திய சமூகத்தின் மொழி மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
அதேவேளை, மாறிவரும் உலகின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய சமூகம் இலக்கவியல் பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இலக்கவியல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய இளைஞர்களும் தொழில்முனைவோரும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகள் இலக்கவியல் கல்வி மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்டு வருவதையும், மாணவர்களிடையே தொழில்நுட்ப ஆர்வம் அதிகரித்து வருவதையும் அவர் வரவேற்றார். இந்த ஆர்வம் செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் உள்ளிட்ட எதிர்காலத் தொழில்நுட்பத் துறைகளிலும் தொடர்ந்து வளர வேண்டும் என வலியுறுத்தினார்.
வரும் ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளில் இலக்கவியல் கல்விக்கான வாய்ப்புகள் விரிவடைந்து, அதிகமான மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர், இந்திய சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இலக்கவியல் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கி நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, இந்தத் தீபாவளி இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒளியேற்றி, அன்பும் ஒற்றுமையும் மேலோங்கச் செய்யட்டும் என்றும், மலேசியா தொடர்ந்து அமைதியும் வளமும் நிறைந்த நாடாகத் திகழட்டும் என்றும் வாழ்த்துத் தெரிவித்தார்.







