கோலாலம்பூர், 05 நவம்பர் 2026 : உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்படலாம் எனப் பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பும் விநியோகமும் சீரான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களைத் தேவைக்கு அதிகமாக வாங்கிச் சேமிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
சில நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்குமாறு தங்களது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. ஆனால், அந்த நாடுகளின் நிலைமையுடன் மலேசியாவின் தற்போதைய சூழலை ஒப்பிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நாட்டின் விநியோகச் சங்கிலி தொடர்ந்து சீராகச் செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் வழக்கம்போல் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ற அளவில் மட்டுமே பொருட்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என அர்மிசான் கேட்டுக்கொண்டார்.







