துரியான் துங்கல், 05 நவம்பர் 2026 : மலேசியாவின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சித் துறையான TVET-ஐ மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ‘பிரதமரின் தங்கக் கை விருது 2026’ (MATEPM 2026) விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. மலேசியப் பொதுப்பணித் துறை அமைச்சகம் (KKR) மற்றும் மனிதவள அமைச்சகம் (KESUMA) இணைந்து, திறன் மேம்பாட்டுத் துறை (JPK) வழியாக ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து 2,500க்கும் மேற்பட்ட திறன் பயிற்சியாளர்கள் மற்றும் துறை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து, ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக்கான ‘பிரதமரின் தங்கக் கை விருதுக் கோப்பையை’ வழங்கிச் சிறப்பித்தார். WorldSkills Malaysia (ஒர்லட் ஸ்கில்ஸ் மலேசியா) போட்டியின் பயிற்றுநர் மற்றும் இளையோர் பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.



இவ்வாண்டு 58 திறன் துறைகளில் போட்டிகள் நடைபெற்றன. WSMB, WSMP, JuniorSkills மலேசியா (JSM) மற்றும் WorldSkills Malaysia University Challenge (WSMUC) என நான்கு முக்கியப் பிரிவுகளின் கீழ், 23 போட்டி மையங்களில் இப்போட்டிகள் இடம்பெற்றன.
உயர்தரத் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்கும் முயற்சியில், பொதுப்பணித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அகாடமி பினான் மலேசியா (ABM) கிழக்கு மண்டலம், CIDB Technologies மற்றும் MYBIM Centre உள்ளிட்ட பயிற்சி நிலையங்களும் போட்டி மையங்களாகப் பங்களித்தன.
தொழில்துறையின் தேவைகள் மற்றும் நான்காவது தொழில்துறைப் புரட்சி (IR4.0) வளர்ச்சிக்கு ஏற்ப திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் இத்தகைய பயிற்சி வசதிகளும் நிபுணத்துவமும் முக்கியப் பங்கு வகிப்பதாக அமைச்சகம் தெரிவித்தது.
போட்டிகளில் சிறப்பாகச் சாதித்த அனைத்து வெற்றியாளர்களுக்கும் பொதுப்பணித் துறை அமைச்சகம் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், TVET துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளித்த தொழில்துறைப் பங்காளிகள் மற்றும் ஒத்துழைப்பு அமைப்புகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. நாட்டின் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திறமையான பணியாளர்களை உருவாக்குவதுடன், மலேசியாவின் பொருளாதார மற்றும் தேசிய வளர்ச்சிக்கும் இத்தகைய முயற்சிகள் வலுசேர்க்கும் என அமைச்சகம் குறிப்பிட்டது.







