என் தமிழ்

தீபாவளியை முன்னிட்டு ஜோகூரில் 1,781 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபாடு

ஜோகூர், 05 நவம்பர் 2026 : தீபாவளிப் பண்டிகையின்போது பொதுமக்களின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்தும் வகையில், ஜோகூர் மாநிலம் முழுவதும் 1,781 காவல்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நவம்பர் 7 முதல் 9ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ‘ஓப் சாயா’ (Op Cahaya) எனும் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார். குடியிருப்புப் பகுதிகள், பொழுதுபோக்கு மையங்கள், வணிக வளாகங்கள், இந்துக் கோயில்கள், முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சர்வதேச நுழைவாயில்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்புக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றார்.

ஜோகூர் பாருவில் உள்ள ஜாலான் ட்ரஸ் தீபாவளி பஜாரில் நடைபெற்ற நேரடி சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். இதற்கிடையில், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வதால், குறிப்பாக வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என காவல்துறை எதிர்பார்க்கிறது.

எனவே, பயணத்தின்போது போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதுடன், முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுமாறும், சோர்வான நிலையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், விடுமுறைக்காக வீடுகளைப் பூட்டிவிட்டுச் செல்பவர்கள், தங்களது பயண விவரங்களை காவல்துறையின் இலவச ‘Volunteer Smartphone Patrol’ (VSP) செயலியில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் வீடுகள் காலியாக இருப்பதை காவல்துறை அறிந்து, உரிய ரோந்துப் பணிகளை மேற்கொள்ள முடியும். இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை VSP செயலி மூலம் 5,294 தகவல்கள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4,425 தகவல்கள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 869 தகவல்கள் அதிகரித்துள்ளன.

இருப்பினும், மாநிலத்தின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது VSP செயலியின் பயன்பாடு இன்னும் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்ட காவல்துறைத் தலைவர், பொதுமக்கள் பண்டிகைக் காலங்களில் மட்டுமின்றி அன்றாட வாழ்க்கையிலும் இச்செயலியைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.

Scroll to Top