கோலாலம்பூர், 04 நவம்பர் 2026 : மக்களின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புகளையும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதிலும் தமிழ் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றி வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள மெனாரா பெர்கேசோவில் இன்று தமிழ் ஊடக நண்பர்களுக்காக நடைபெற்ற தீபாவளி மதிய விருந்துபசார நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சமூகத்தின் குரலை வெளிப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார்.



செய்திகளில் அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், அவற்றை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் செய்தியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் உழைப்புக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தவறான தகவல்களும் அவதூறுகளும் பரவும் இன்றைய சூழலில், உண்மைக்கும் நேர்மைக்கும் முன்னுரிமை அளித்து செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், போலிச் செய்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, மலேசிய இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் அவசியம் எனக் குறிப்பிட்ட ரமணன், இன மற்றும் மத அடையாளங்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி சமூகப் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார்.

இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக மடானி அரசாங்கம் மித்ரா மூலம் கல்வி, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் பி40 பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அரசாங்க மானியங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெறுவோர் அவற்றை முறையாகப் பயன்படுத்தி நிலையான தொழில்களை உருவாக்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டிலும் மடானி திட்டங்களின் கீழ் கூடுதல் முன்னெடுப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அவர், சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்த ரமணன், அரசாங்கத்திற்கும் இந்தியச் சமூகத்திற்கும் ஊடகங்கள் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டியதுடன், அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.







