கோலாலம்பூர், 04 நவம்பர் 2026 : நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரிடரில் உயிரிழந்த மலேசியர்களின் குடும்பங்களுக்கு, மொத்தம் RM174,000 மதிப்பிலான நிதிப் பலன்களை வழங்க பெர்கேசோ (PERKESO) நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்பேரிடரில் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 54 பேரின் விவரங்களை ஆய்வு செய்ததில், 28 பேர் பெர்கேசோவின் பங்களிப்புத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தகுதி பெற்ற குடும்பங்களுக்கு உடனடி நிதியுதவியாக தலா RM3,000 வழங்கப்படுவதுடன், பெர்கேசோவின் இயலாமைத் திட்டமான Skim Keilatan கீழ் வாரிசு ஓய்வூதியப் பலனான Pencen Penakat வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் முழுமையாகப் பெறப்பட்டதும் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும் என அவர் கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள மெனாரா பெர்கேசோவில் நடைபெற்ற பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான நிதிப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தகுதி பெற்ற 28 குடும்பங்களில் 16 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்று நிதியுதவியைப் பெற்றுக்கொண்டனர். எஞ்சிய குடும்பங்களுக்கான நிதிப் பலன்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை தொடர்புகொள்ளப்படாத தகுதியுள்ள குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் ஆவணங்கள் மற்றும் விவரங்களைப் பூர்த்தி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரை பெர்கேசோவிடமிருந்து தகவல் கிடைக்காத உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அருகிலுள்ள பெர்கேசோ அலுவலகத்தை அணுகி உதவி பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், பெர்கேசோவில் பங்களிப்புச் செலுத்தாத தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளைப் பெற்றுத்தரும் வகையில் Social Synergy திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் 130 அரசாங்க அமைப்புகள் உட்பட 990 சமூகப் பங்காளி அமைப்புகள் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பொருத்தமான உதவிகளை அடையாளம் காணும்.
தொழிலாளர்கள் எந்தத் துறையில் பணியாற்றினாலும், அவர்களின் வேலைவாய்ப்பின் தன்மை அல்லது முதலாளியின் பின்னணி எதுவாக இருந்தாலும் சமூகப் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் உரிய அடிப்படை உரிமை என ரமணன் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பெர்கேசோ வாரியத் தலைவர் டத்தோ ஸ்ரீ சுபஹான் கமால் மற்றும் பெர்கேசோ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஸீஸ் முகமட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







