கோலாலம்பூர், 04 நவம்பர் 2026 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற மெகா பஜாருக்கு இன்று வருகை தந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அங்குள்ள இந்திய வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை மற்றும் கொண்டாட்ட ஏற்பாடுகளால் பரபரப்பாகக் காணப்பட்ட மெகா பஜாரில், கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்த பிரதமர், அவர்களின் தீபாவளித் தயாரிப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்துக் கேட்டறிந்தார்.


இந்தியச் சமூகத்தினருடன் பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட அவர், மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் குறித்தும் அறிவித்தார். மடானி அரசாங்கத்தின் ரொக்க உதவித் திட்டமான Sumbangan Tunai Rahmah (STR) நான்காம் கட்டத்தின் கீழ் மொத்தம் RM1.1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
இதன் மூலம் நாடு முழுவதும் 54 லட்சம் பேர் பயன்பெறவுள்ளனர். நவம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை கட்டம் கட்டமாக உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த உதவித் திட்டத்தின் வாயிலாக இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 6.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான செலவுகளைச் சமாளிக்கவும், குடும்பங்களின் அன்றாடத் தேவைகள் மற்றும் ஆண்டு இறுதிச் செலவுகளுக்கு ஆதரவளிக்கவும் இந்த நிதியுதவி உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


மேலும், STR மற்றும் Sumbangan Asas Rahmah (SARA) போன்ற திட்டங்கள் மூலம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவளிப்பதை மடானி அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, தீபாவளிக் காலத்தில் இந்திய வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் நேரடியாக உரையாடி அவர்களின் கருத்துகளையும் தேவைகளையும் கேட்டறிந்த நிகழ்வாக அமைந்தது.







